| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.77 திருவாய்மூர் - திருத்தாண்டகம் | 
| பாட வடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
 ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
 அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
 கோட லரவார் சடையிற் கண்டேன்
 கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
 வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 1 | 
| பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன் பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
 நீல நிறமுண் கண்டங் கண்டேன்
 நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
 காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
 கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
 மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 2 | 
| மண்ணைத் திகழ நடம தாடும் வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்
 விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்
 வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்
 நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்
 நாலு மறையங்க மோதக் கண்டேன்
 வண்ணப் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 3 | 
| விளைத்த பெரும்பத்தி கூர நின்று மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
 இளைக்குங் கதநாக மேனி கண்டேன்
 என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்
 திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்
 சேணார் மதின்மூன்றும் பொன்ற வன்று
 வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 4 | 
| கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன் காலிற் கழல்கண்டேன் கரியின் றோல்கொண்
 டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்
 உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்
 நான்மறை யானோடு நெடிய மாலும்
 நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக
 மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 5 | 
| அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
 முடியார் சடைமேல் அரவ மூழ்க
 மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
 கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்
 கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
 வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 6 | 
| குழையார் திருத்தோடு காதிற் கண்டேன் கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
 இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
 ஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்
 தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
 தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
 மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 7 | 
| பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
 பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
 பாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்
 விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
 மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
 மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 8 | 
| மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
 கையம் பரனெரித்த காட்சி கண்டேன்
 கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
 ஐயம் பலவூர் திரியக் கண்டேன்
 அன்றவன் றன்வேள்வி அழித்து கந்து
 வையம் பரவ இருத்தல் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 9 | 
| கலங்க இருவர்க் கழலாய் நீண்ட காரணமுங் கண்டேன் கருவாய் நின்று
 பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்
 பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்
 இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்
 இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்
 வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்
 வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |